
பெங்களூரு-காமாக்யா அதிவிரைவு ரயில் ஒடிஷா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார், 8 பேர் காயமடைந்துள்ளார்கள்.
அஸ்ஸாம் மாநிலம் காமாக்யாவை நோக்கிச் செல்லும், பெங்களூரு-காமாக்யா அதிவிரைவு ரயில் நேற்று (மார்ச் 30) காலை 8.50 மணி அளவில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தொடங்கியது.
இன்று காலை ஒடிஷா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள நெர்குன்டி ரயில் நிலையத்திற்கு அருகே செல்லும்போது, இந்த ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 8 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த நபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும், காயமடைந்தவர்கள் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
காலை 11.54 மணிக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளதானதாக கிழக்குக் கடற்கரை ரயில்வே மண்டல அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கவலை தெரிவித்து, தன் எக்ஸ் கணக்கில் ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மாஜி வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`கட்டாக்கில் உள்ள நெர்குன்டி ரயில் நிலையத்திற்கு அருகே காமாக்யா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ள சம்பவத்தால் கவலையடைந்தேன். அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி. விரைவில் இயல்பு நிலை திரும்புவதை உறுதி செய்யும் வகையில், சம்பவ இடத்தில் அதிகாரிகள் உள்ளனர். உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன’ என்றார்.
அதேபோல பாதிக்கப்பட்ட நபர்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒடிஷா அரசுடனும், இந்திய ரயில்வேயுடனும் தொடர்பில் இருப்பதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.