ஒரு காலத்தில் அதிகாரம் பொருந்திய அதிகாரி: விருப்ப ஓய்வுபெற்ற சுஜாதா கார்த்திகேயன் ஐஏஎஸ்!

தொடர்ச்சியாக 5 முறை அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக், ஆட்சியை இழப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக இருந்தது.
ஒரு காலத்தில் அதிகாரம் பொருந்திய அதிகாரி: விருப்ப ஓய்வுபெற்ற சுஜாதா கார்த்திகேயன் ஐஏஎஸ்!
1 min read

முன்னாள் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனின் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்றுள்ளார்.

2000ஆம் ஆண்டில் ஒடிஷா பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் இணைந்த தமிழகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியன், 2011-ல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் செயலராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் அம்மாநிலத்தின் செல்வாக்குமிக்க அரசு அதிகாரியானார்.

பாண்டியனின் வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு அரசுத் திட்டங்கள் வெற்றிகரமாக அம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டன. இதன் மூலம் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய நம்பிக்கையைப் பெற்றவரானார். ஒடிஷாவைப் பூர்வீகமாகக் கொண்ட பாண்டியனின் மனைவி சுஜாதாவும் அம்மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். அதிகாரம் பொருந்திய பல்வேறு அரசுப் பதவிகளை வகித்துள்ளார்.

அக்டோபர் 2023-ல் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் வி.கே. பாண்டியன். இதைத் தொடர்ந்து கடந்தாண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒடிஷா சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பாண்டியன் போட்டியிடவில்லை என்றாலும், அவரைப் பேசுபொருளாக்கியது பாஜக.

பாண்டியனை மையப்படுத்தி, பெயர் கூறாமல் பிரதமர் மோடி கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். தொடர்ச்சியாக 5 முறை அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக், ஆட்சியை இழப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக இருந்தது.

முதல்முறையாக பாஜக ஆட்சி அமைந்து, முதல்வராக மோகன் சரண் மாஜி பொறுப்பேற்றதும், 6 மாத கால விடுப்பில் சென்றார் சுஜாதா கார்த்திகேயன். இதைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் மீண்டும் பணியில் இணைந்தார். இந்நிலையில் தற்போது சுஜாதா கார்த்திகேயன் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in