ஜம்மு காஷ்மீர் முதல்வராகும் ஓமர் அப்துல்லா: இண்டியா கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை

போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் ஓமர் அப்துல்லா.
ஜம்மு காஷ்மீர் முதல்வராகும் ஓமர் அப்துல்லா: இண்டியா கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை
ANI
1 min read

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், ஓமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்பார் என்று அறிவித்துள்ளார் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா.

மூன்று கட்டங்களாக நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.08) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

பிற்பகல் 3.45 மணி அளவில் முடிவுக்கு வந்த வாக்கு எண்ணிக்கையின்படி, இண்டியா கூட்டணியின் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 49 தொகுதிகளை வென்றுள்ளது இண்டியா கூட்டணி.

இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது பாஜக. மேலும் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

மேலும், 7 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடைசியாக 1987 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் 8 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக தன் இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, `மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கிவிட்டனர். இதன் மூலம் ஆகஸ்ட் 5-ல் எடுக்கப்பட்ட முடிவை (ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு) அவர்கள் ஏற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஓமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் முதல்வராகப் பதவியேற்பார்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in