
ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இன்று (அக்.16) காலை பதவியேற்றார் ஓமர் அப்துல்லா.
2019-ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மறுசீரமைக்கப்பட்டு, சட்டப்பேரவையைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், சட்டப்பேரவை இல்லாத லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவில்லை.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 16-ல் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். இதன்படி 90 இடங்களைக் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவைக்கு செப்.18, 25 மற்றும் அக்.1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் அக்.8-ல் எண்ணப்பட்டன.
இதில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி-சி.பி.எம். ஆகிய கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணிக்கு 49 இடங்கள் கிடைத்தன. தனித்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 29 இடங்களும், மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்தன.
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 49 இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அதனைத் தொடர்ந்து இன்று (அக்.16) காலை ஓமர் அப்துல்லாவுக்கு ஜம்மு-காஷ்மீரின் முதல்வராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா.
இந்த நிகழ்வில் ஓமர் அப்துல்லாவுடன் 5 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கவில்லை.