

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கௌரவ லெப்டினன்ட் கர்னலாகப் பொறுப்பேற்றார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும், 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்று வரலாறு படைத்தவர். இதன்மூலம் இளையோருக்கான உலக ஈட்டி எறிதல் போட்டிகளில் வெற்றியடைந்த முதலாவது இந்திய வீரரும், ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அவரது சாதனைகளைக் கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு 2018-ல் அர்ஜுனா விருதும், 2022-ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கியது.
நீரஜ் சோப்ரா ராணுவத்தின் மூலம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வந்தவர். கடந்த 2016-ல் புனேயில் உள்ள இந்திய ராணுவத்தின் 'மிஷன் ஒலிம்பிக்' பிரிவு சார்பில் தேர்வு செய்யப்பட்டு, பின் இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2018ல் 'சுபேதாராக' பதவி உயர்வு பெற்ற நீரஜ் சோப்ரா, பின் சுபேதார் மேஜராக நியமிக்கப்பட்டார். அதன்பின் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைத்த அவருக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 16 அன்று இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில் கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பான் தலைநகர் டோப்பியோவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர்பாராத விதமாக எட்டாவது இடம் பிடித்து போட்டியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் அவரது கௌரவ லெப்டினன்ட் கர்னல் பொறுப்பேற்பு நிகழ்ச்சி தில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ தலைமைத் தளபதி உபேந்திரா திவேதி ஆகியோர் நீரஜ் சோப்ராவுக்கு பொறுப்பேற்பு சிறப்பை நடத்தி வைத்தனர்.