
தேர்தல் பரப்புரையில் முன்வைக்கப்பட்ட ஊடுருவல் கோஷமும், பழைய மூத்த தலைமை முகங்களும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு உதவவில்லை எனக் கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (நவ.23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தாலும், காலை 10 மணிக்குப் பிறகு இண்டியா கூட்டணி முன்னிலை பெற ஆரம்பித்தது.
மாலை 4 மணி நிலவரப்படி, ஆளும் இண்டியா கூட்டணி 56 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தக் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களிலும், சி.பி.எம். (எம்.எல்)(எல்) 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
அதே நேரம் பாஜக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தக் கூட்டணியில் பாஜக 21 இடங்களிலும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு 1 இடத்திலும், லோக் ஜன சக்தி 1 இடத்திலும், ஜனதா தளம் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பின்தங்கிய பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித் தொகை வழங்கிய மைய்யா சம்மான் யோஜனா, முதல்வர் ஹேமந்த் சோரனின் வெற்றிக்குப் பெருமளவு உதவியதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 43 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில், வாக்குரிமை பெற்றிருந்த பெண்களில் ஏறத்தாழ 69 சதவீதத்தினர் வாக்களித்திருந்தனர்.
மேலும், பெண்கள் வாக்குகளை கவரும் வண்ணம் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன். அத்துடன் தேர்தலுக்கு முன்பு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஹேமந்த சோரன் சிறைலடைக்கப்பட்டதால் பழங்குடி மக்களுக்கிடையே எழுந்த அனுதாபமும் ஹேமந்த் சோரனுக்குக் கைகொடுத்துள்ளது.
அதேநேரம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியின்போது வங்கதேசத்தைச் சேர்ந்த வெளியாட்கள் பழங்குடிகளின் இடங்களில் ஊருடுவியுள்ளதாக தேர்தல் பரப்புரையில் பாஜக முன்வைத்த கோஷமும், குற்றச்சாட்டும் எடுபடவில்லை. மேலும், அர்ஜுன் முண்டா, பாபுலால் மராண்டி என பாஜகவில் இருக்கும் மூத்த பழங்குடியின தலைவர்கள் பலரும் பழங்குடியின மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதிலும், முன்னாள் முதல்வரும் தற்போதைய பாஜக மாநில தலைவருமான பாபுலால் மராண்டி பழங்குடிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் நிற்காமல், பொதுத் தொகுதியான தன்வரில் நின்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன், இந்தத் தேர்தலில் பொட்கா தொகுதியில் நின்ற முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் மனைவி மீரா முண்டா 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலில் பழங்குடிகளுக்காக ஒதுக்கப்பட்ட 29 தொகுதிகளில் 2-ல் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. தற்போது நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஒரே ஒரு பழங்குடி தொகுதியில் மட்டுமே பாஜக முன்னிலை வகிக்கிறது. அதுவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து பாஜகவுக்கு வந்த முன்னாள் முதல்வர் சம்பாய் சோரேனின் செராய்கெல்லா தொகுதியாகும்.
இதனால், ஜார்க்கண்ட் பாஜகவுக்கான புதிய பழங்குடியின தலைவரை தேடும் முயற்சியில் கூடிய விரைவில் கட்சித் தலைமை இறங்கும் என்பது உறுதியாகியுள்ளது.