அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்கள்: ஜம்முவில் தேசிய பாதுகாப்புப் படை!

ரஜௌரி-பூஞ்ச் பகுதியில் மட்டும் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்கள்: ஜம்முவில் தேசிய பாதுகாப்புப் படை!
1 min read

தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை அடுத்து தேசிய பாதுகாப்புப் படையின் தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவை ஜம்முவில் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தின், ஜம்மு பகுதியில் ஜம்மு, டோடா, கத்துவா, ரம்பன், ரியசி, கிஸ்த்வார், ரஜௌரி, பூஞ்ச், உதம்பூர், சம்பா ஆகிய மாவட்டங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக இந்த 10 மாவட்டங்களில், கிட்டத்தட்ட 8 மாவட்டங்கள் வரை தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய தாக்குதல் சம்பவங்களால் ஜம்மு பகுதியில் மட்டும் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள், தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 44 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் ரஜௌரி-பூஞ்ச் பகுதியில் மட்டும் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்தப் பகுதியில் மட்டும் கடந்த அக்டோபர் 2021-ல் இருந்து இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்புப் படையின் தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவை ஜம்மு பகுதியில் நிரந்தரமாக ஏற்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அவசர காலங்களிலும், தீவிரவாத தாக்குதல் சம்பவங்களின்போதும் பிரச்னைகளை கையாள இது உதவும் என்பதை அடுத்து, இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது ராணுவம், காவல்துறை, துணை ராணுவப்படை ஆகியவை இணைந்து தீவிரவாத நடமாட்டத்திற்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன. குறிப்பாக அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், எல்லையோர பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in