`என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு தொழிலை நாம் நிறுத்தவேண்டும், இது முற்றிலும் மோசடியானது’ என்று மருத்துவப் படிப்புக்காக பஞ்சாப் அரசு கொண்டுவந்த புதிய என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு முறையை சாடியுள்ளது உச்ச நீதிமன்றம்.
கடந்த ஆகஸ்ட் 20-ல் இளங்கலை மருத்துவப் படிப்புகளின் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டு இடங்களுக்கான விளக்கத்தை விரிவுபடுத்தியது பஞ்சாப் மாநில அரசு. இந்தப் புதிய விளக்கத்தின்படி என்.ஆர்.ஐ மாணவர்களின் உறவினர்களும் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டின் கீழ் இளங்கலை மருத்துவப் படிப்பைப் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
பஞ்சாப் அரசின் இந்தப் புதிய விளக்கத்தை எதிர்த்து பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டின் இந்த புதிய விளக்கம் தவறுகளுக்கு வழிவகுக்கும் எனக் கூறி பஞ்சாப் அரசின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம். இதை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது பஞ்சாப் மாநில அரசு.
இந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஜெ.பி. பர்திவாலா ஆகியோரைக் கொண்ட அமர்வுக்கு முன்பு ஆஜரான பஞ்சாப் அரசு வழக்கறிஞர், `ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இதைப் போல என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டுக்கு விரிவான விளக்கம் பின்பற்றப்படுகிறது’ என வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட் `இந்த என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு தொழிலை நாம் நிறுத்த வேண்டும். இது முற்றிலும் மோசடியானது. நமது கல்வி அமைப்புக்கு நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்’ என்றார். இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமான ஒன்றுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறி பஞ்சாப் அரசின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்ற அமர்வு.