தற்போது ரூ. 1,000, தேர்தலில் வென்றால் ரூ. 2,100: கெஜ்ரிவால் அறிவிப்பு

பணவீக்கம் அதிகமாக உள்ளதால் ரூ. 1000 போதாது என்று என்னிடம் சில பெண்கள் தெரித்தனர். எனவே பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 2100 செலுத்தப்படும்.
தற்போது ரூ. 1,000, தேர்தலில் வென்றால் ரூ. 2,100: கெஜ்ரிவால் அறிவிப்பு
1 min read

பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் உதவித்தொகை திட்டத்திற்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தலில் வெற்றிக்குப் பிறகு இந்த உதவித்தொகை ரூ. 2100 ஆக அதிகரிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

தில்லியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித் தொகை வழங்கும், `முக்கியமந்திரி மஹிளா சம்மான் யோஜனா’ திட்டத்திற்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக இன்று (டிச.12) அறிவித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்கான பயனாளிகள் பதிவு நாளை முதல் தொடங்கும் எனவும் அவர் அறிவித்தார்.

அதேநேரம், சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளதால் ரூ. 1000 உதவித்தொகையை தற்போது பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த முடியாத நிலை உள்ளதாகவும், தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மியின் ஆட்சி மீண்டும் டெல்லியில் அமைந்ததும், உதவித்தொகை அதிகரிக்கப்பட்டு ரூ. 2100 ஆக வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் நடந்த விழாவில் தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், `ஒவ்வொரு பெண்மணிக்கும் ரூ. 1000 வழங்க முன்பு நான் உறுதியளித்தேன். பணவீக்கம் அதிகமாக உள்ளதால் ரூ. 1000 போதாது என என்னிடம் சில பெண்கள் தெரித்தனர். எனவே பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 2100 செலுத்தப்படும். சிறையில் இருந்து வெளிவந்ததும் ஆதிஷியுடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டேன்’ என்றார்.

இந்த நிகழ்வின்போது தில்லி முதல்வர் ஆதிஷி உடனிருந்தார். 70 இடங்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு வரும் ஜனவரி 2025-ல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்வைத்து இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in