
ஜூலை 16-ம் தேதி ஏமனில் தூக்கிலிடப்படவுள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவை விடுவிப்பதற்கு அல்லது அவர் தூக்கிலிடப்படுவதைத் தடுப்பதற்கு குறைந்தபட்ச வழிகள் மட்டுமே இருப்பதாக மத்திய அரசு இன்று (ஜூலை 14) உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த மத்திய அரசு, கொலையானவரின் குடும்பத்திற்கு `ரத்தப் பணம்’ (Blood Money) கொடுக்க நிமிஷா பிரியாவின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
`அரசாங்கத்தால் செய்யக்கூடியது பெரியதாக எதுவும் இல்லை. ஏமனின் அந்த பகுதி ராஜதந்திர ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை’ என்று மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி கூறினார்.
மேலும், `இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கம் செல்லக்கூடிய வரம்பு இருக்கிறது. நாம் அதை அடைந்துவிட்டோம். ஏமன் உலகின் வேறு எந்த பகுதியையும்போல் இல்லை. பொதுவில் சென்று நிலைமையை சிக்கலாக்க நாங்கள் விரும்பவில்லை. தனியார் மட்டத்தில் நாங்கள் முயற்சி செய்கிறோம். சில ஷேக்குகள், அங்கு செல்வாக்கு மிக்கவர்கள் மூலம் இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன’ என்றார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா, தனது உள்ளூர் வணிக கூட்டாளியான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்டோ மஹ்தியை மற்றொரு செவிலியரின் உதவியுடன் போதைப்பொருள் கொடுத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மஹ்தியின் உடலை இருவரும் துண்டு துண்டாக வெட்டி நிலத்தடி தொட்டியில் வீசியதாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து நிமிஷா அந்நாட்டு நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் போராடியுள்ளார். ஆனால் அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அந்த இடம் ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள (ஏமன் தலைநகர்) சனாவின் எல்லைக்குள் வருவதாலும், இதனால் ராஜதந்திர ரீதியாக உள்ள தடைகள் காரணமாகவும், அவரை விடுதலை செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.