தற்கொலை அல்ல; திட்டமிட்ட கொலை: ஒடிஷா மாணவி தற்கொலை விவகாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

90% தீக்காயத்துடன் உயிருக்குப் போராடி வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 14) இரவு உயிரிழந்தார்.
தற்கொலை அல்ல; திட்டமிட்ட கொலை: ஒடிஷா மாணவி தற்கொலை விவகாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
ANI
1 min read

பாலியல் துன்புறுத்தல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஒடிஷாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து ஆளும் பாஜக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஃபக்கீர் மோஹன் தன்னாட்சி கல்லூரியில் ஒன்றில் பாதிக்கப்பட்ட மாணவி பி.எட். படித்து வந்துள்ளார். அந்த கல்லூரியில் கல்வியியல் துறையின் தலைவராகப் பணி​யாற்​றி வந்த  சமிரா குமார் சாகு, அந்த மாணவிக்குத் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இது தொடர்பாக கல்லூரியின் புகார் குழுவிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகாரளித்துள்ளார். ஆனால் அவரது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 12 அன்று கல்லூரியின் முதல்வரை அந்த மாணவி சந்தித்துப் பேசியுள்ளார். அதன்பிறகு கல்லூரி வளாகத்தில் அவர் தீக்குளித்தார்.

அருகிலிருந்தவர்கள் அந்த மாணவியை மீட்டு பாலசோர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, அன்று (ஜூலை 12) மாலை மேல் சிகிச்சைக்காக அவர் மாணவி புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

90% தீக்காயத்துடன் உயிருக்குப் போராடி வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 14) இரவு 11.46 மணியளவில் உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மாணவி தீக்குளித்த சம்பவத்திற்குப் பிறகு, கல்லூரியின் முதல்வர் திலீப் குமார் கோஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்ட பதிவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது,

`ஒடிஷாவில் நீதிக்காகப் போராடிய ஒரு மகளின் மரணம், பாஜக அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கொலை என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. அந்த துணிச்சலான மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் எழுப்பினார் - ஆனால் நீதி வழங்குவதற்குப் பதிலாக, அவர் அச்சுறுத்தப்பட்டார், துன்புறுத்தப்பட்டார், மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார்.

எப்போதும் போல, பாஜகவின் அமைப்பு குற்றம்சாட்டப்பட்டவரைப் பாதுகாத்து வந்தது - மேலும் ஒரு அப்பாவி மகளை தீக்குளிக்க கட்டாயப்படுத்தியது. இது தற்கொலை அல்ல; திட்டமிட்ட கொலை’ என்றார்.

இந்த விவகாரத்தை முன்வைத்து மாநில பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பிஜு ஜனதா தளம் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் பிரிவுகள் ஒடிஷா முழுமைக்குமான போராட்டங்களை அறிவித்துள்ளன. அதேநேரம் காங்கிரஸும், அதன் இடதுசாரி கூட்டணிக் கட்சிகளும் ஜூலை 17 அன்று மாநிலம் தழுவிய பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in