இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்: அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! | Supreme Court

பணம் சம்பாதிக்க இன்ஃப்ளூயன்ஸர்கள் பேசும்போது, ​​சுதந்திரமான பேச்சுக்கான பாதுகாப்பிற்குப் பின்னால் அவர்கள் ஒளிந்துகொள்ள முடியாது.
இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்: அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! | Supreme Court
1 min read

இன்ஃப்ளூயன்ஸர்களுக்கென தெளிவான நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு இன்று (ஆக. 26) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இணைய வழியாக மேற்கொள்ளப்படும் நகைச்சுவை அல்லது வர்ணனை பொதுமக்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடாது என்பதை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக, செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம் உள்பட இதில் சம்மந்தப்பட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.

சமூகத்தில் இருக்கும் நலிந்த பிரிவினர், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை கேலி செய்ய யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, வணிக நோக்கங்களுக்கான பேச்சுக்கு சுதந்திர பேச்சுக்கான உரிமை (Right to Free Speech) நீட்டிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியது.

`இது சுதந்திரமான பேச்சு அல்ல... இது வணிகப் பேச்சு’ என்று நீதிபதி பாக்சி கூறினார், அதாவது பணம் சம்பாதிக்க இன்ஃப்ளூயன்ஸர்கள் பேசும்போது, ​​சுதந்திரமான பேச்சுக்கான பாதுகாப்பிற்குப் பின்னால் அவர்கள் ஒளிந்துகொள்ள முடியாது. அதற்கு பதிலாக, அவர்களின் வார்த்தைகள் ஏற்படுத்தக்கூடிய தீங்குகளுக்கு, குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் போன்ற நலிந்த குழுக்களுக்கு எதிராக வார்த்தைகளுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

`இந்தியாஸ் காட் லேடண்ட்’ நிகழ்ச்சியில் தோன்றியபோது மாற்றுத்திறனாளிகளை கேலி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட யூடியூபர் ரன்வீர் அல்லஹ்பாடியாவுக்கு எதிரான வழக்கை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்த கருத்துக்களைத் தெரிவித்தது.

முதுகெலும்பு தசைச் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் குடும்பங்கள் நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இத்தகைய நிலையில் உள்ள குழந்தைகளை இது அவமதிப்பதாக அவர்கள் கூறினார்கள்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பயனுள்ள நெறிமுறைகளை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குமாறு செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கத்தை (NBDA) உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு ஏற்கனவே கடுமையான தணிக்கை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆனால் யூடியூப் மற்றும் பாட்காஸ்டுகள் போன்ற சமூக வலைதளங்களுக்கு தற்போது அத்தகைய மேற்பார்வை முறை அமலில் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in