தெலங்கானா, ஆந்திராவில் வரலாறு காணாத கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தெலங்கானா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் நேற்று (ஆகஸ்ட் 31) பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதாரங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தெலங்கானா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் நேற்று தொடங்கி தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழையால் கடலோர ஆந்திர பிரதேச மாவட்டங்களான கிருஷ்ணா, குண்டூர், விஜயவாடா மற்றும் தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த கனமழையால் ஏரிகள், குளங்கள் ஆகியவை நிரம்பின. இதைத் தொடர்ந்து நகரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்த காரணத்தால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவின் சில இடங்களில் ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் சில இடங்களில் தண்டவாளங்களை வெள்ள நீர் சூழ்ந்த காரணத்தால், விஜயவாடாவில் இருந்து கிளம்பும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த கனமழையால் நேற்று மட்டும் ஆந்திர மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மரணமடைந்துள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. மேலும் கனமழையின் பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக அவர் ஆலோசனைக் கூட்டத்தையும் நடந்தினார்.
இன்றும் (செப்.01) அங்கே கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவலை அடுத்து, பொதுமக்கள் அவசியமில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அந்திர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.