தில்லியில் திடீர் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

100-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகையும், புறப்பாடும் தாமதமாகியுள்ளன.
தில்லியில் திடீர் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
ANI
1 min read

தேசிய தலைநகரப் பகுதியான தில்லியில் இன்று (மே 2) காலை திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் சிக்கித் தவிக்கும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

கனமழையை அடுத்து முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். மோசமான வடிகால் பணிகளால் சாலைகளில் நீர் தேங்கியிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். பலத்த காற்று மற்றும் கனமழையால் நகரின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

துவாரகாவின் ஜாஃபர்பூர் காலன் பகுதியில் சூறைக்காற்று வீசியதைத் தொடர்ந்து, அங்கிருந்த ஒரு வீட்டின் மீது வேப்பரம் விழுந்ததில், அந்த வீடு இடிந்து விழுந்துள்ளது. இதில் 26 வயதான ஜோதி என்ற பெண்ணும், அவரது மூன்று குழந்தைகளும் பலியாகியுள்ளனர். ஜோதியின் கணவர் அஜய், காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

மோசமான வானிலை காரணமாக தில்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகையும், புறப்பாடும் தாமதமாகியுள்ளன, மேலும் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் தில்லியில் தரையிறங்குவதற்கு பதிலாக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வு மையம் தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், கூடுமானவரை பயணங்களைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக பிரகதி மைதான் பகுதியில் மணிக்கு 78 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியுள்ளது, மேலும் லோதி சாலை பகுதியில் 78 மி.மீ. மழை பெய்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in