
அதிகாரபூர்வ இல்லத்தில் தீ விபத்தின்போது எரிந்த நிலையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் வகையில், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பணியாற்றியபோது, தில்லியில் அவர் வசித்த அரசு குடியிருப்பின் பொருட்கள் வைக்கும் அறையில் சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கச் சென்ற தீயணைப்புப் படையினர், அந்த அறையில் இருந்து எரிந்த நிலையில் பண மூட்டைகளை மீட்டனர்.
சம்பவம் நடைபெற்றபோது நீதிபதி யஷ்வந்த வர்மா வீட்டில் இல்லை. இதைத் தொடர்ந்து, பண மூட்டைகள் குறித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பணத்துக்கும், தனக்கும் சம்பந்தம் கிடையாது என்று நீதிபதி யஷ்வந்த வர்மா கூறினார்.
இந்த விவகாரம் குறித்து உள் விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால், விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே தில்லியில் இருந்து அலஹாபாத் உயர் நீதிமன்றத்திற்கு யஷ்வந்த் வர்மா பணியட மாற்றம் செய்யப்பட்டார். எனினும், அவருக்கு இன்னமும் நீதிமன்றப் பணி ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ல் தொடங்கவுள்ளது.
இதில், யஷ்வந்த் வர்மாவை தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சி.என்.என்.-நியூஸ்18 ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
`அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நான் உரையாடியுள்ளேன், அது மிகவும் நேர்மறையாக இருந்தது. இது அரசியல்ரீதியான விஷயம் அல்ல, நீதித்துறையில் ஊழல் பற்றிய விஷயம் என்பதால் இதில் அரசியல் வாதங்களுக்கு இடமில்லை, இதனால் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்’ என்றார்.
நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கான நோட்டீஸுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 100 எம்.பி.க்கள் கையெழுத்திடவேண்டும்.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொண்டு வரும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கையெழுத்திடவேண்டும் என்பதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளதாக கூறப்படுகிறது.