பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: தமிழ்நாட்டுக்கு என்ன சிக்கல்?

"பாஜக முதலில் மத்திய அரசை அணுகி, மஹாதாயி மற்றும் மேகேதாட்டு திட்டங்களுக்கு அனுமதியைப் பெறட்டும்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் விவகாரத்தில் பாஜகவை விமர்சித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாள்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மாநில அரசு இதற்காக பல்வேறு அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. எதிர்க்கட்சியான பாஜக, ஆளும் காங்கிரஸ் அரசை விமர்சித்து வருகிறது. பாஜகவை விமர்சித்த டி.கே. சிவகுமார், பாஜகவினர் முதலில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்டத்துக்கு அனுமதியைப் பெற்று வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, டி.கே. சிவகுமார் கூறியதாவது:

"மாநில அரசுக்கு எதிராக நாளை போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அவர்கள் என்ன வேண்டுமோ செய்துகொள்ளட்டும். அவர்கள் முதலில் மத்திய அரசை அணுகி, மஹாதாயி மற்றும் மேகேதாட்டு திட்டங்களுக்கு அனுமதியைப் பெறட்டும்.

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு கிடையாது. பாஜகதான் தட்டுப்பாட்டை உருவாக்குகிறது. தமிழ்நாட்டுக்கு முறைப்படி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதோ, அதை தான் நாங்கள் திறந்துவிடுகிறோம். பெங்களூருவுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதானமாக உள்ளது.

மொத்தமுள்ள 16 ஆயிரம் போர்வெல்களில் 7 ஆயிரம் போர்வெல்கள் பழுதடைந்துள்ளன. மக்களுக்கு தண்ணீர் விநியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். சட்டவிரோத தண்ணீர் லாரி கும்பல்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். பாஜக அரசியலில் ஈடுபடுகிறது. அதுகுறித்து நாங்கள் கவலைகொள்ளப் போவதில்லை.

வீட்டிலிருந்து பணிபுரியுமாறு நிறுவனங்களை அறிவிக்கச் சொல்லும் அளவுக்கு இன்னும் தட்டுப்பாடு ஏற்படவில்லை" என்றார்.

டி.கே. சிவகுமாரின் பேச்சு மூலம் மேகேதாட்டுவில் கர்நாடகத்தின் குறுக்கே அணை கட்டுவதில் அந்த மாநில அரசு உறுதியாக இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

முன்னதாக, கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவது உறுதி என்று கூறி, இதற்கென 3 குழுக்களை அமைத்தார். இதற்கு தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பத் தீர்மானம் கொண்டு வந்தார்.

சட்டப்பேரவையில் இதற்குப் பதிலளித்துப் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசால் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க முடியாது என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in