
எந்த மதமும் மாசு உண்டாவதை ஊக்குவிப்பது இல்லை, இவ்வாறு பட்டாசுகளை வெடித்தால் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன என கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு.
பட்டாசுகளை வெடிக்க அமலாகியிருந்த தடையையும் மீறி, தீபாவளி நாளில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், கடந்த நவ.1-ல் தலைநகர் தில்லியில் காற்று தரக் குறியீடு மிக மோசம் என்ற நிலையை எட்டியது. தில்லி மட்டுமல்லாமல் தேசிய தலைநகர் பகுதியைச் சேர்ந்த குருகிராம், நொய்டா, காஸியாபாத் ஆகிய இடங்களிலும் காற்று மாசு மோசமான நிலையில் இருந்தது.
இந்நிலையில், தீபாவளி நாளன்று பட்டாசுகள் வெடிப்பதற்கான தடை உத்தரவை அமல்படுத்தத் தவறிய அதிகாரிகளுக்கு இன்று (நவ.11) கேள்விகளை எழுப்பியது நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு.
அப்போது, `எந்த மதமும் மாசு உண்டாக்கும் எந்த ஒரு செயலையும் ஊக்குவிப்பது இல்லை. இந்த வகையில் பட்டாசுகளை வெடித்தால் குடிமக்களின் ஆரோக்கியத்துக்கான அடிப்படை உரிமை பாதிக்கப்படும். எதனால் அக்டோபர் முதல் ஜனவரி வரையில் மட்டும் பட்டாசுகளை தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் தடை உள்ளது? காற்று மாசு அனைத்து வருடமும் உயர்ந்து வருகிறது’ என்றனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஐஷ்வர்யா பாடி, `பண்டிகை காலம் மற்றும் மாசுபாட்டை அதிகரிக்கும் காற்றடிக்கும் காலம் ஆகியவற்றின்போது மட்டுமே, தற்போது காற்று மாசுபாடு மீது கவனம் செலுத்தப்படுகிறது’ என்றார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், `பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்றனர். இதனைத் தொடர்ந்து, பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் உள்ள தடையை கண்டிப்பான முறையில் அமல்படுத்துமாறு தில்லி காவல்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.