
மஹாராஷ்டிரத்தின் மாலேகானில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜகவின் முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உள்பட இந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு நபர்களையும் தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜூலை 31) விடுவித்தது.
வெறும் சந்தேகத்தால் வழக்கை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிறுவ அரசுத் தரப்பு தவறிவிட்டது என்றும் சிறப்பு நீதிபதி ஏ.கே. லஹோதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மஹாராஷ்டிரத்தில் கணிசமான இஸ்லாமிய மக்கள் வசிக்கும் மாலேகானில் கடந்த செப்டம்பர் 29, 2008 அன்று மோட்டார் சைக்கிளில் (எல்.எம்.எல். ஃப்ரீடம் பைக்) கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இஸ்லாமியர்களின் புனிதமான ரம்ஜான் மாதத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
இந்த குண்டுவெடிப்பு வழக்கை முதலில் மஹாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) விசாரித்து, இது அபினவ் பாரத் குழு சம்பந்தப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று குற்றம்சாட்டியது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக 2008-ல் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர், குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் என்று ஏடிஎஸ் கூறியது.
அத்துடன், அப்போது ராணுவ உளவுத்துறையில் பணியமர்த்தப்பட்டிருந்த அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் புரோஹித், வெடிபொருட்களுக்கான ஏற்பாடுகளை செய்ததாகவும், அபினவ் பாரத் சந்திப்புகளில் அவர் பங்கேற்றதாகவும் ஏடிஎஸ் குற்றம்சாட்டியது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை 2011-ல் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அத்துடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்நிலையில், இன்று (ஜூலை 31) வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோஹித், மேஜர் (ஓய்வு) ரமேஷ் உபாத்யாய், சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர், சுதாகர் தார் திவேதி என்கிற சங்கராச்சாரியா மற்றும் சமீர் குல்கர்னி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
`சமூகத்திற்கு எதிராக ஒரு பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் தார்மீக அடிப்படையில் மட்டுமே குற்றவாளி என்று நீதிமன்றத்தால் கூறவிட முடியாது’ என்று நீதிபதி கூறினார்.