
வழக்கறிஞர்கள் இனி அவசர வழக்கை விசாரிக்க வாய்மொழியாக கோரிக்கை வைக்கக்கூடாது எனவும், மின்னஞ்சல் மற்றும் எழுத்துப்பூர்வமாக மட்டுமே முறையீடு செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவித்துள்ளார்.
வழக்கமாக உச்ச நீதிமன்றத்தில், ஒவ்வொரு நாளும் அன்றைக்கு விசாரிக்கப்படும் வழக்குகளை பட்டியலிடுவதவற்கு முன்பு, தங்களின் வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வின் முன்பு வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுப்பார்கள். இந்த நடைமுறையை மாற்றும் நோக்கில் இன்று (நவ.12) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா.
அவசர வழக்குகளை பட்டியலிடுவதற்கும், அவற்றின் மீது விசாரணை நடத்த கோரிக்கைவிடுப்பதற்கும் இனி மின்னஞ்சல் வாயிலாக அல்லது எழுத்துப்பூர்வமாக மட்டுமே வழக்கறிஞர்கள் முறையீடு செய்யவேண்டும். அவசர வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இனி வாய்மொழி கோரிக்கைகள் அனுமதிக்கப்படாது என அறிவித்துள்ளார் தலைமை நீதிபதி.
மேலும், அவசர வழக்காக விசாரணை நடத்த மின்னஞ்சல் மற்றும் எழுத்துப்பூர்வமாக வைக்கப்படும் கோரிக்கைகளில், அவற்றுக்கான காரணங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். குடிமக்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், சமமான முறையிலும், எளிதாகவும் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (நவ.11) இந்தியாவின் 51-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சீவ் கன்னா. பதவியேற்றதற்குப் பிறகான தன் முதல் அறிக்கையில் நீதித்துறையில் நிலவும் பிரச்னைகள், நிலுவையிலுள்ள வழக்குகள் குறைப்பு, நீதித்துறையை எளிய மக்களுக்கு அணுகக்கூடிய வகையில் மாற்றுவது போன்றவை குறித்து குறிப்பிட்டிருந்தார் சஞ்சீவ் கன்னா.