அஹமதாபாத் விமான விபத்து: விமானியை யாரும் குறைகூற முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து! | Ahmedabad Plane Crash |

விமானியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் டிஜிசிஏ-வுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
No one can blame the pilot, says Supreme Court on Ahmedabad Plane Crash incident
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்
2 min read

அஹமதாபாத் விமான விபத்தில் விமானியை யாராலும் குறைகூற முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அஹமதாபாதிலிருந்து லண்டன் நோக்கி கடந்த ஜூன் 12 அன்று புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில விநாடிகளிலேயே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழந்தார்கள். மேலும், விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் 19 பேரும் உயிரிழந்தார்கள். மொத்தம் 260 பேர் விபத்து காரணமாக உயிரிழந்தார்.

விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பு (AAIB) விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகிறது. 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்டது.

விமானிகளின் உரையாடல் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இந்த அறிக்கையின்படி, விமானத்தில் என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டிருக்கிறது. இதற்கான ஸ்விட்ச் கட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. ஒரு விமானி எதற்காக கட் ஆஃப் செய்தாய் என்று கேட்டிருக்கிறார். இதற்கு சக விமானி நான் கட் ஆஃப் செய்யவில்லை எனப் பதிலளித்திருக்கிறார்.

விமானிகளின் இந்த உரையாடல் செய்திகளில் பேசுபொருளானது. யாரோ ஒரு விமானி எரிபொருள் விநியோகத்தைத் தடை செய்ததாகத் திரித்துப் பேசப்பட்டன. இதன் காரணமாக, ஏஏஐபி-யின் அறிக்கைக்கு இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக, விமானத்தை இயக்கிய மூத்த மறைந்த விமானி சுமீத் சபர்வாலின் தந்தை புஷ்கர் ராஜ் சபர்வால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். விமான விபத்து தொடர்பாக சுயாதீன நீதித் துறை விசாரணை தேவை என மனுவில் கோரியுள்ளார்.

புஷ்கர் ராஜ் சபர்வால் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்.

மனுதாரர் சார்பில், "விமானத்தை இயக்கிய விமானயின் தந்தை நான். எனக்கு வயது 91 ஆகிறது. தற்போது நடைபெறுவது சுயாதீன விசாரணை அல்ல. விசாரணை சுயாதீனமாக நடைபெற வேண்டும். நான்கு மாதங்கள் ஆகின்றன" என்று கூறி நீதித் துறை விசாரணை கோரப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி அமர்வு முன்பு இது விசாரணைக்கு வந்தது. நவம்பர் 10 அன்று மற்றொரு வழக்குடன் இணைந்து இதை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் டிஜிசிஏ-வுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், "இந்த விபத்தானது துரதிர்ஷ்டவசமானது. உங்களுடைய மகன் மீது காரணம் சொல்லப்படும் சுமையை நீங்கள் சுமக்க வேண்டியதில்லை. எதற்காகவும் அவரைக் காரணம் சொல்ல முடியாது.

எரிப்பொருள் விநியோகத்தை கட் ஆஃப் செய்தாயா என ஒரு விமானி கேட்கிறார். அதற்கு மற்றொருவர் இல்லை என்கிறார். எந்தத் தவறும் நடந்திருப்பதாக அறிகையில் குறிப்பிடப்படவில்லை" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.

Ahmedabad Plane Crash | Supreme Court | Sumeet Sabharwal | Pushkar Raj Sabharwal |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in