இந்திய வரலாற்றில் முதன்முறை: இஸ்லாமியர்கள் இல்லாத முதல் அமைச்சரவை!

இந்தியாவில் 20 கோடி இஸ்லாமியர்கள் உள்ள நிலையில், புதிய மத்திய அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர் கூட இடம்பெறவில்லை.
இந்திய வரலாற்றில் முதன்முறை: இஸ்லாமியர்கள் இல்லாத முதல் அமைச்சரவை!

ஜூன் 9-ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 71 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த 71 நபர்களில் ஒரு இஸ்லாமியர்கள் கூட இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் 293 இடங்களைக் கைப்பற்றியது பாஜக கூட்டணி, இந்த 293 எம்.பி.களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை.

கடந்த மோடி அமைச்சரவையில் ஒரே இஸ்லாமிய உறுப்பினராக முக்தர் அப்பாஸ் நக்வி மட்டும் இடம்பெற்றார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த முக்தர் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 2022-ல் முடிவடைந்ததால், 2022 முதல் 2024 வரை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஸ்மிரிதி இரானி பொறுப்பு வகித்தார்.

மோடியின் முதல் அமைச்சரவையில் (2014) நஜ்மா ஹெப்துல்லா சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1999-ல் பதவியேற்ற வாஜ்பாய் அரசில் ஷானவாஸ் ஹுசேன், ஓமர் அப்துல்லா என இரு இஸ்லாமியர்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.

18வது மக்களவைத் தேர்தலில், இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள், ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஓவைசி, பாரமுல்லா சுயேட்சை எம்.பி அப்துல் ஷேக் மற்றும் லடாக் சுயேட்சை எம்.பி முகமது ஹனீபா என 24 இஸ்லாமிய எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பவுத்த மதத்தவரான கிரண் ரிஜிஜூ `சிறுபான்மையினர் நலத்துறை’ கேபினட் அமைச்சராகவும், கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் குரியன் சிறுபான்மையினர் நலத்துறையின் இணை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in