நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக்

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒடிஷாவின் நலன்களைப் புறக்கணித்தால், எங்கள் கட்சி உறுப்பினர்கள் அதற்குக் கடுமையாக எதிர்வினை ஆற்றுவார்கள்
நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக்
ANI

பிஜூ ஜனதா தளம் கட்சித்தலைவர் நவீன் பட்நாயக் தன் கட்சியைச் சேர்ந்த 9 மாநிலங்களவை உறுப்பினர்களுடன் புவனேஸ்வரில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிஜூ ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் சஸ்மித் பாத்ரா, `இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது. நாங்கள் எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்படப் போகிறோம். ஒடிஷாவின் நலங்களைக் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம். இனி பாஜகவுக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை’ எனத் தெரிவித்தார்.

`மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒடிஷாவின் நலன்களைப் புறக்கணித்தால், எங்கள் கட்சி உறுப்பினர்கள் அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றுவார்கள்’ என்றார் பாத்ரா.

மேலும், `வலுவான எதிர்க்கட்சியாக இருந்து மக்களின் உரிமைகளுக்காகப் போராடுமாறு எங்கள் தலைவர் நவீன் பட்நாயக் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். ஒடிஷாவுக்கான சிறப்பு அந்தஸ்துடன், ஊரகப் பகுதிகளில் அதிக வங்கிக் கிளைகள் இல்லாதது குறித்து மாநிலங்களவையில் பேசுவோம்’ எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் பாத்ரா.

பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒன்பது எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் 1998-ல் கட்சி ஆரம்பித்த காலம் தொடங்கி முதல் முறையாக இந்த 18வது மக்களவையில் பிஜூ ஜனதா தளத்துக்கு ஒரு எம்.பி கூட இல்லை. நடந்து முடிந்த தேர்தலில் ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதியில் பாஜகவுக்கு 20 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 1 இடமும் கிடைத்தன.

மக்களவைத் தேர்தலுடன் ஒடிஷா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது. அதில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி பாஜகவைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி முதல்வராகப் பதவியேற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in