
முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக விசாரணை நடத்தப் போதிய ஆதாரமில்லை என்று தெரிவித்துள்ளது அம்மாநில லோக் ஆயுக்தா.
அரசாங்க வளர்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மாற்றாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 மனைகளை ஒதுக்கியது மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பு (முடா). இதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது அம்மாநில லோக் ஆயுக்தா.
இந்நிலையில், முடா நில முறைகேடு குறித்து கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட்டிடம் கடந்தாண்டு புகாரளித்த மூன்று நபர்களில் ஒருவரான சமூக ஆர்வலர் சினேஹமாயி கிருஷ்ணாவுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது கர்நாடக மாநில லோக் ஆயுக்தா.
அந்த நோட்டீஸில், `குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களான முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் தேவராஜு ஆகிய நால்வர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரமில்லை. இது தொடர்பான இறுதி அறிக்கை உயர் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளிக்க சினேஹமாயி கிருஷ்ணாவுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கியுள்ளது லோக் ஆயுக்தா. அதன்பிறகு லோக் ஆயுக்தாவிடம் இறுதி அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.
முடா நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சினேஹமாயி கிருஷ்ணா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த பிப்.7-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.