
தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, `எந்த ஒரு பதவி மீதும் எனக்கு ஆசையில்லை. தில்லியின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறேன்’ என்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 26, 2023-ல் தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்புடைய வழக்கில் அப்போது தில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவைக் கைது செய்தது.
சுமார் 18 மாதங்கள் கழித்து கடந்த ஆகஸ்ட் 9-ல் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார் மணீஷ் சிசோடியா. இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு மணீஷ் சிசோடியா அளித்த பேட்டி பின்வருமாறு:
`கட்சியில் எனது பங்கு என்ன என்பது குறித்து பிற கட்சித் தலைவர்களுடன் பேசிவிட்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்வார். இப்போது ஒவ்வொரு தெருவில் உள்ள மக்களை சந்திக்க இருக்கிறேன். தில்லியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறேன். கடந்த 17 மாதங்களாக தில்லி மக்கள் மீதும், நாடு மீதும் நான் வைத்திருக்கும் அன்பு கூடியிருக்கிறது.
எந்த ஒரு பதவி மீதும் எனக்கு ஆசையில்லை. எனக்கு இருக்கும் ஒரே ஆசை தில்லி மக்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதே. மக்களுக்கு நல்ல மருத்துவமனைகள் கிடைக்க வேண்டும். பொது போக்குவரத்து முன்னேறியுள்ளது, அது மேலும் முன்னேற வேண்டும்.
இந்த ஆசைகளை நிறைவேற்ற தேர்தலில் போட்டியிட வேண்டும். எனவே தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். எனக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. முதல்வர் கெஜ்ரிவால் மீது உள்ள வழக்கிலும் நல்ல முடிவு வெளியாகும்’.