நிபந்தனை விதிக்கவில்லை, இடஒதுக்கீடு நிலைப்பாட்டில் மாற்றமும் இல்லை: தெலுங்கு தேசம்

தெலுங்கு தேசத்திலிருந்து ஒருவர் மத்திய அமைச்சராகவும், ஒருவர் மத்திய இணை அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளதாகக் கட்சி சார்பில் காலை உறுதி செய்யப்பட்டது.
நிபந்தனை விதிக்கவில்லை, இடஒதுக்கீடு நிலைப்பாட்டில் மாற்றமும் இல்லை: தெலுங்கு தேசம்
ANI

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடரும் என்பதில் மாற்றம் இல்லை என மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் தெலுங்கு தேசம் (டிடிபி) எம்.பி. ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று மாலை பிரதமராகப் பதவியேற்கிறார். இந்தப் பதவியேற்பு விழாவில் அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளார்கள். தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் ராம்மோகன் நாயுடு, சந்திரசேகர் ஆகியோர் பிரதமர் மோடியுடன் அமைச்சர்களாக இன்று பதவியேற்கிறார்கள்.

தெலுங்கு தேசம் சார்பில் பாஜகவிடம் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை என்று ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

ராம் மோகன் நாயுடு கூறியதாவது:

"நீண்ட காலத்துக்குப் பிறகு தெலுங்கு தேசத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கிறது. ஆந்திரத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய கனவு. ஆந்திரம், தெலங்கானா என எங்கு இருந்தாலும், தெலுங்கு மக்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம். நரேந்திர மோடியின் உதவியுடன் ஆந்திரத்துக்கு வளர்ச்சியைக் கொண்டு வருவோம்.

பாஜகவிடம் எங்களுக்கு இதுவரை எந்தக் கோரிகையும் இல்லை. எங்களுடைய உறவு வலிமையாக உள்ளது. முறையான பேச்சுவார்த்தைக்குப் பிறகே நாங்கள் முடிவெடுப்போம். இடஒதுக்கீட்டில் எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது" என்றார் ராம் மோகன் நாயுடு.

தெலுங்கு தேசத்திலிருந்து ஒருவர் மத்திய அமைச்சராகவும், ஒருவர் மத்திய இணை அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளதாகக் கட்சி சார்பில் காலை உறுதி செய்யப்பட்டது. 36 வயதுடைய ராம் மோகன் நாயுடு, அமைச்சரவையில் இளம் மத்திய அமைச்சர் என்ற பெருமையைப் பெறுகிறார். இவர் ஸ்ரீகாகுளம் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது. ஆனால், கடந்த மே 5-ல் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு ஆந்திரத்தில் தொடரும் என்று வாக்குறுதியளித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in