தொகுதிப் பங்கீட்டில் எந்தக் குழப்பமும் கிடையாது: சுப்ரியா சுலே

கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் எந்தக் குழப்பமும் இல்லை என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் சிவசேனை இடையே தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை இருப்பதால் இழுபறி நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இதை சுப்ரியா சுலே முற்றிலுமாக மறுத்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"உள்ளே எந்தக் குழப்பமும் கிடையாது. சோனியா காந்தி, உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் இடையே தில்லியில் 15 நாள்களுக்கு முன்பு சந்திப்பு நிகழ்ந்தது. தொகுதிப் பங்கீடு குறித்து இந்த சந்திப்பின்போது நிறைய விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த 8-10 நாள்களில் வெளியாகும். நாங்கள் கூட்டணியில் இருப்பதால் தொகுதிப் பங்கீட்டில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். எனவே, இது நிகழத்தான் செய்யும். இந்தக் கூட்டணியில் பிரகாஷ் அம்ப்தேகர் நிச்சயமாக மிக முக்கியமானப் பங்கை வகிப்பார்" என்றார்.

மகாராஷ்டிரத்தில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் சிவசேனை (உத்தவ் தாக்கரே) 23 இடங்களை ஒதுக்குமாறு கேட்டதாகத் தகவல் வெளியானது. இதனிடையே, வஞ்சித் பகுஜன் அஹாதி, சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய அனைத்துக் கட்சிகளும் தலா 12 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு வஞ்சித் பகுஜன் அஹாதி கட்சியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கடிதம் எழுதினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in