காங்கிரஸ் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாது: உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித் துறை

"தேர்தல் நேரத்தில் எந்தவொரு கட்சிக்கும் பிரச்னையை உண்டாக்க வருமான வரித் துறை விரும்பவில்லை"
காங்கிரஸ் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாது: உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித் துறை

மக்களவைத் தேர்தல் முடியும் வரை காங்கிரஸிடமிருந்து ரூ. 3,500 கோடியைப் பெற கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என வருமான வரித் துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2014-15 முதல் 2016-17 வரையிலான மதிப்பீடு ஆண்டுக்கான வரியாக ரூ. 1,745 கோடியைச் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது. 2014-15-ம் ஆண்டுக்கு ரூ. 663 கோடி, 2015-16-ம் ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ. 664 கோடி மற்றும் 2016-17-ம் ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ. 417 கோடியை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது. தில்லி உயர் நீதிமன்றம் மார்ச் 2016-ல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தில்லி உயர் நீதிமன்றம் மார்ச் 2016-ல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மேல்முறையீடு செய்தது இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வருமான வரித் துறை மார்ச் மாதம் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக காங்கிரஸ் கட்சி இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வருமான வரித் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "காங்கிரஸுக்கு அனுப்பப்பட்ட சமீபத்திய வரி நோட்டீஸுக்கும் தற்போது நிலுவையில் இருக்கும் விவகாரத்துக்கும் தொடர்பு இல்லை என்றபோதிலும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித் துறை கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காது. தேர்தல் நேரத்தில் எந்தவொரு கட்சிக்கும் பிரச்னையை உண்டாக்க வருமான வரித் துறை விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

வருமான வரித் துறையின் பதிலைக் கேட்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 2-வது வாரத்துக்கு ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in