
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் வசித்து வருகிறார். கடந்த மார்ச் 14 அன்று யஷ்வந்த் வர்மா வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் நீதிபதியின் வீட்டில் ஏராளமான பணம் இருந்ததைக் கண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 21 அன்று அறிக்கை வெளியிட்ட உச்ச நீதிமன்றம், "நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களும் வதந்திகளும் பரப்பப்படுகின்றன.
தகவல் கிடைத்ததும், தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஆதாரங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிக்கும் உள் விசாரணை நடைமுறையைத் தொடங்கினார்.
மார்ச் 20, 2025 அன்று கொலீஜியம் கூட்டத்திற்கு முன்பு தனது விசாரணையைத் தொடங்கிய தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, இன்று (மார்ச் 21) அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பார். கூடுதல் நடவடிக்கைக்காக இந்த அறிக்கை ஆராயப்படும்" என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக புகைப்படங்கள், காணொளிகள் அடங்கிய அறிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டது. தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தாவாலியா, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனு சிவராமன் ஆகிய மூவர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிக்கை, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதில் உள்ளிட்ட ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"பழைய பொருள் வைக்கப்படும் அறையில் நான் உள்பட என் குடும்பத்தினர் யாராலும் பணம் வைக்கப்படவில்லை. பணம் இருந்ததாகக் கூறப்படும் அறை நான் வாழும் பகுதியிலிருந்து தொடர்பற்றுதான் உள்ளது. அந்த இடத்துக்கும் நான் வாழும் பகுதிக்கும் இடையே தடுப்புச் சுவர் இருக்கிறது.
பத்திரிகைகளில் என் மீது குற்றம்சாட்டப்படுவதற்கும் அவதூறு பரப்புவதற்கும் முன்பு ஊடகங்கள் விசாரணைகளை மேற்கொண்டிருக்கலாம்.
என்னிடம் பகிரப்பட்ட காணொளியில், அங்கிருந்து எதுவும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஒன்றும் தெரியவில்லை. மேலும், சம்பவ இடத்தில் இருந்ததாக பணம் எதையும் அதிகாரிகள் யாரும் காட்டவில்லை.
மேலும், சம்பந்தப்பட்ட அறையிலிருந்து நாங்கள் பணத்தை அகற்றிவிட்டோம் என்ற குற்றச்சாட்டையும் நான் கடுமையாக மறுக்கிறேன், முழுமையாக நிராகரிக்கிறேன். மேலே குறிப்பிட்டுள்ளபடி, தீயில் எரிந்த பணம் என்று எங்களிடம் எதுவும் காட்டப்படவில்லை அல்லது ஒப்படைக்கப்படவில்லை.
நானும் என் மனைவியும் போபாலில் இருந்து விமானம் மூலம் மார்ச் 15, 2025 அன்று மாலை தான் திரும்பினோம். எனவே, அங்கிருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எனது ஊழியர்கள் யாரும் பணம் உள்பட எதையும் அகற்றவில்லை" என்று மறுத்திருந்தார்.