
265 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய திட்டத்தில் லஞ்சம் கொடுத்தது மற்றும் மோசடி புகார் தொடர்பாக அமெரிக்காவில் தொழிலதிபர் கௌதம் அதானி கடந்த நவம்பர் 21 அன்று குற்றம்சாட்டப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு மேல் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லாபம் ஈட்டும் வகையில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கௌதம் அதானி, அவருடைய உறவினர் சாகர் அதானி மற்றும் 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்கா மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளார்கள் என்பதுதான் புகார்.
வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி இது விதிமீறல என்பதால் நியூயார்கில் அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டியுள்ளது. நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், அதானி குழும இயக்குநர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அதானி குழுமத்தின் மூன்று இயக்குநர்கள் மீது ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் இருப்பதாக வெளியான செய்திகள் தவறானது என அதானி குழுமம் விளக்கமளித்துள்ளது.
"வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிமீறலில் ஈடுபட்டதாக கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
லஞ்சம் கொடுக்கப்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது அல்லது வாக்குறுதி அளிக்கப்பட்டது என்று வைக்கப்பட்ட வாதங்களை நம்பி மட்டுமே குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதானி நிர்வாகிகளிடமிருந்து இந்திய அதிகாரிகள் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை" என்று அதானி குழுமம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.