ஆகஸ்ட் 29 வரை மைசூரூ நகர வளர்ச்சி அமைப்பு (முடா) ஊழல் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது சிறப்பு நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என இன்று (ஆகஸ்ட் 19) உத்தரவிட்டுள்ளது கர்நாடக மாநில உயர்நீதிமன்றம்.
கடந்த வாரம் கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட், மைசூரூ நகர வளர்ச்சி அமைப்பு (முடா) ஊழல் விவகாரத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது சட்டப்படி வழக்கு தொடர அனுமதியளித்தார். இதை அடுத்து பெங்களூருவில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், சித்தராமையா மீது சமூக ஆர்வலர்கள் சினேஹமாயி கிருஷ்ணாவும், ஆபிரஹாமும் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் மீது நாளையும், நாளை மறுநாளும் விசாரிக்க இருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஆகஸ்ட் 29 வரை சித்தராமையாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள் மீது சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம், கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சட்டப் பிரிவு 218, ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர மாநில ஆளுநர் அனுமதி அளிப்பதாக, சித்தராமையா மீது ஆளுநரிடம் புகார் வழங்கிய சமூக ஆர்வலர்கள் சினேஹமாயி கிருஷ்ணாவுக்கும், ஆபிரஹாமுக்கும் கடிதம் எழுதினார் ஆளுநரின் சிறப்பு செயலாளர் பிரபு சங்கர்.
இதைத் தொடர்ந்து, ஆளுநரின் முடிவை எதிர்த்து முதல்வர் சித்தராமையா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29-ல் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
அரசாங்க வளர்ச்சிப் பணிகளால் நிலங்களை இழந்த மைசூர் வாழ் பொதுமக்களுக்கு மைசூரூ நகர வளர்ச்சி அமைப்பால் வேறு இடங்களில் நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. வளர்ச்சிப் பணிகளால் நிலத்தை இழந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விட அதிக மதிப்பிலான 14 பிளாட்கள் ஒதுக்கப்பட்டன என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.