
பீரேன் சிங் தலைமையிலான மணிப்பூர் பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது நிதீஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் கட்சி
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்குக் கடைசியாக கடந்த 2022-ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவுக்கு 32 இடங்களும், தேசிய மக்கள் கட்சிக்கு 7 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 6 இடங்களும், காங்கிரஸுக்கு 5 இடங்களும், நாகா மக்கள் முன்னணிக்கு 5 இடங்களும், சுயேட்சைகளுக்கு 3 இடங்களும் கிடைத்தன.
ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை பெற்று, மீண்டும் மணிப்பூர் முதல்வராகப் பதவியேற்றார் பீரேன் சிங். சில மாதங்கள் கழித்து ஐக்கிய ஜனதா தளத்தின் 5 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்து அக்கட்சியின் உறுப்பினரானார்கள். அவர்களை தகுதி நீக்கக்கோரிய மனு மணிப்பூர் சபாநாயகரின் பரிசீலனையில் உள்ளது.
தற்போது மணிப்பூர் சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு முஹமத் அப்துல் நசீர் என்கிற எம்.எல்.ஏ. மட்டுமே உள்ளார். இந்நிலையில், பாஜக அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாகவும், எம்.எல்.ஏ. அப்துல் நசீரை எதிர்க்கட்சி உறுப்பினராகக் கருதுமாறும், ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார் மணிப்பூர் மாநில ஜக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் க்ஷேத்ரமாயும் பீரேன் சிங்.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் தற்போது பாஜகவுக்கு 37 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்துடன், 5 இடங்களைக் கொண்ட நாகா மக்கள் முன்னணியும், 3 சுயேட்சைகளும் பாஜக அரசுக்கு ஆதரவை வழங்கியுள்ளன. எனவே ஐக்கிய ஜனதா தளத்தின் இந்த முடிவால், பாஜக ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.