
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்டுள்ளது.
பிஹாரிலுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் 57 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள 44 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும் கட்சியின் தலைமையகப் பொறுப்பாளருமான சந்தன் குமார் சிங் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 4 பெண்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 9 பெண்கள் இடம்பெற்றுள்ளார்கள். விஜேந்திர பிரசாத் யாதவ், லேஷி சிங், ஜெயந்த் ராஜ் மற்றும் முஹமது ஸமா கான் போன்ற அமைச்சர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் மொத்தமுள்ள 101 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
Bihar Election | Bihar Assembly Election | Bihar Elections | Bihar Assembly Elections | Bihar Election 2025 | Bihar Assembly Election 2025 | JDU | Nitish Kumar |