கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வஃக்பு வாரிய திருத்தச் சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி.
பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் இந்த மசோதாவுக்கு எதிராக ஏற்கனவே கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில், தற்போது ஐக்கிய ஜனதாதளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
வஃக்பு வாரிய திருத்தச் சட்டமசோதாவில் உள்ள சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது ஐக்கிய ஜனதாதளம் கட்சி. இஸ்லாமியர்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கருத்தாக உள்ளது. பீஹார் மாநில மக்கள் தொகையில் 18 சதவீதத்தினர் இஸ்லாமியர்கள். அம்மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் ஜா, பீஹார் மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸாமா கான் ஆகியோர் மத்திய சிறுபான்மையினர் நலம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்துப் பேசினார்கள்.
மேலும் கடந்த ஆகஸ்ட் 22-ல், இந்த திருத்தச்சட்ட மசோதா தொடர்பாக பீஹார் மாநில ஷியா வஃக்பு வாரிய உறுப்பினர்களையும், சன்னி வஃக்பு வாரிய உறுப்பினர்களையும் சந்தித்துப் பேசினார் முதல்வர் நிதீஷ் குமார்.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் நடந்த இந்த சட்டத்திருத்த மசோதா குறித்த விவாதத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவின் சில ஷரத்துகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்கள். அவர்களுக்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் ரிஜிஜூ, `சிலர் வஃக்பு வாரியங்களைக் கைப்பற்றியுள்ளனர். வெகு ஜன இஸ்லாமியர்களுக்கு நீதி கிடைக்கவே இந்த சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
தற்போது இந்த வஃக்பு வாரிய சட்டதிருத்த மசோதா, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.