பிஹார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதீஷ் குமார்: 9 புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு | Nitish Kumar |

கடந்த ஆட்சியில் துணை முதலமைச்சர்களாக இருந்த இருவர் அமைச்சர்களாகப் பதவியேற்பு...
பிஹார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதீஷ் குமார்
பிஹார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதீஷ் குமார்PIB Bihar
2 min read

பிஹார் மாநில முதலமைச்சராக 10-வது முறையாக நிதீஷ் குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

பிஹார் சட்டமன்ற தேர்தலில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இதில், பாஜக 89 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எதிர்த்துப் போட்டியிட்ட இண்டியா கூட்டணி தரப்பில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 25 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் மட்டுமே வென்றது.

இதைத் தொடர்ந்து தனது முந்தைய ஆட்சியின் முதலமைச்சர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார். நேற்று, பிஹார் மாநிலத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி அரங்கில் மாநிலத்தின் முதலமைச்சராக 10-வது முறை நிதீஷ் குமார் பொறுப்பேற்றார். அவருக்கு பிஹார் ஆளுநர் ஆரீஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2000-ல் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற நிதீஷ் குமார் 7 நாள்கள் பதவியில் இருந்தார். அதைத் தொடர்ந்து 2005 முதல் அவர் தொடர்ந்து பிஹார் முதலமைச்சராக இருக்கிறார்.

நிதீஷ் குமாரைத் தொடர்ந்து, கடந்த ஆட்சியில் துணை முதலமைச்சர்களாக இருந்த பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சௌத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா இருவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டார்கள். அதேபோல், ஜேடியுவைச் சேர்ந்த பிஜேந்திர பிரசாத், யாதவ் ஷ்ரவண் குமார் உள்ளிட்டோரும், பாஜகவைச் சேர்ந்த மங்கள் பாண்டே, திலீப் ஜெய்ஸ்வால், அசோக் சௌத்ரி உள்ளிட்டோரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

மொத்தமாக 26 அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டதில், பாஜகவைச் சேர்ந்தவர்கள் 14 பேர். ஜேடியுவைச் சேர்ந்தவர்கள் 8 பேர். இருவர் லோக் ஜனசக்தியைச் (ராம்விலாஸ்) சேர்ந்தவர்கள். இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளிலிருந்தும் தலா ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்கள்.

பிஹாரின் புதிய அமைச்சரவையில், மஹுவா தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவைத் தோற்கடித்த சஞ்சய் குமார் சிங் உட்பட 9 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மூன்று பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளார்கள். கயா டவுன் தொகுதியில் வெற்றிபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் பிரேம் குமார் சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில், பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், மற்ற மாநில பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட பலரும் பங்கேற்றனர்.

Summary

Janata Dal-(United) President Nitish Kumar on Thursday (November 20, 2025) took oath as the Chief Minister of Bihar for a record 10th time in the presence Prime Minister Narendra Modi, Amit Shah, J.P. Nadda, and several other NDA leaders.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in