

திருப்பரங்குன்றம் தீபத்தை எதிர்ப்பவர்களுக்கும், ராமர் பாலத்தை மறுப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லாதபடி செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிதின் நபின் கூறியுள்ளார்.
பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020 ஜனவரி 20 அன்று பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் முடிந்த போதிலும், சில காரணங்களால் அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், பிஹாரில் அமைச்சராக இருந்த நிதின் நபின் கடந்த ஆண்டு டிசம்பர் 15 அன்று கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கட்சியின் அடுத்த தேசிய தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அதற்காக வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் (ஜன. 19) நிறைவடைந்தது. அதில் மொத்தம் 37 மனுக்கள் நிதின் நபினின் பெயரைப் பரிந்துரைத்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அவர் பாஜகவின் தேசிய தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பொறுப்பேற்றுக் கொண்ட நிதின் நபின்
இதையடுத்து நிதின் நபின், இன்று தேசிய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது: இன்று நான் பாஜகவின் சித்தாந்தம், மரபுகள் மற்றும் தேசியவாத இயக்கத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பரங்குன்றத்தை எதிர்ப்பவர்களுக்கு இடமில்லை
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரு மலையில் நடைபெறும் புனித கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்க்கட்சிகள் எவ்வாறு நிறுத்த முயன்றன என்பதைக் கண்டோம். ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய எப்படி முயற்சி செய்யப்பட்டது என்பதை சமீபத்தில் பார்த்தோம். ராமர் பாலம் இருப்பதை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் இந்திய அரசியலில் இடமில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்
அடுத்த சில மாதங்களில், தமிழ்நாடு, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரியில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களின் மக்கள் தொகையில் நிகழும் மாற்றம் நம் முன்பு புதிய சவாலை முன்வைக்கிறது. ஆனாலும், பாஜகவினர் தங்கள் போராட்டம் மற்றும் கடின உழைப்பின் மூலம் ஐந்து மாநிலங்களிலும் பாஜகவை வெற்றிக்கு இட்டுச் செல்வார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்றார்.
பிரதமர் மோடி புகழாரம்
முன்னதாக நிதின் நபினை வாழ்த்திப் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
“நிதின் நபின், ஒரு வகையில் ஒரு மில்லினியல் தலைமுறையைச் சேர்ந்தவர்தான். இந்தியாவில் பெரும் மாற்றங்களைக் கண்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் தனது குழந்தைப் பருவத்தில் வானொலியில் செய்திகளைக் கேட்டு, இன்று செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு காலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் இளமைத் துடிப்பும், மிகுந்த அனுபவமும் ஒருங்கே அமைந்துள்ளன. கட்சியின் அனைத்துத் தொண்டர்களின் அர்ப்பணிப்பிற்கு நான் தலைவணங்குகிறேன். கட்சி விஷயங்களில், நிதின் நபின் எனது முதலாளி. நான் ஒரு தொண்டன். இப்போது அவர் நம் அனைவருக்கும் தலைவர். அவரது பொறுப்பு பாஜகவை நிர்வகிப்பது மட்டுமல்ல, NDA கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதும் ஆகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Nitin Nabin, who has taken over as the BJP national president, has said that those who oppose the Thiruparankundram Deepam and those who reject the Ram Bridge should have no place in politics.