கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக மௌனம் காப்பதாக காங்கிரஸ் கட்சிக்குத் தன் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்துத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், `200-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 56 பேர் மரணமடைந்துள்ளனர், அதில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த விவகாரத்தை நான் கண்டிக்கிறேன். மாநில அரசே டாஸ்மாக் என்ற பெயரில் மதுக்கடைகள் நடத்தும்போது, (கள்ளக்குறிச்சி) நகரத்தின் மையப்பகுதியில் விஷச்சாராயம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு இது குறித்துத் தெரியாதா?’ எனத் தன் பேட்டியில் கேள்வி எழுப்பினார் நிர்மலா சீதாராமன்.
`காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எங்கே? தமிழக மக்கள் மீதான அவரது அனுதாபம் மறைந்துவிட்டதா? ராகுல் காந்தி எங்கே இருக்கிறார்? தென்னகத்தின் வாக்குகள் குறித்து பேசுவார். தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகத் தெரிந்ததால்தான் அவர் தேர்தலில் நிற்கிறார். விஷச்சாராயம் காரணமாக தலித் மக்கள் இறந்த பிறகும் இது குறித்து ராகுல் காந்தி, கார்கேவிடமிருந்து ஒரு வார்த்தை கூட இல்லை. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார் நிர்மலா சீதாராமன்.
`தமிழ்நாடு மீது காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த வேண்டும். அதன் கூட்டணிக்கட்சியான திமுக ஆட்சி செய்கிறது என்பதற்காக காங்கிரஸ் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கக்கூடாது’ எனவும் தன் பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தை அருந்தி 4 மருத்துவமனைகளில் மொத்தம் 216 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜூன் 23 மாலை நேர நிலவரப்படி, 5 பெண்கள் உட்பட 56 பேர் மரணமடைந்துள்ளனர்.