ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனத்துக்கு (ஒரு தனிநபர் மற்றொரு தனிநபரிடம் விற்கும்போது) ஜிஎஸ்டி விதிக்கப்படாது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?
1 min read

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசிக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இன்று நடைபெற்றது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கமளித்தார்.

மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இதற்குக் காரணம், காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து (ஐஆர்டிஏஐ) சில தகவல்கள் பெற வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழு அவகாசம் தேவை என உணர்ந்ததால், மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை. ஐஆர்டிஏஐ-யிடமிருந்து கருத்துகள் பெறப்பட்ட பிறகு, அமைச்சர்கள் குழு இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மின்சார வாகனம் மீதான ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார். மின்சார வாகனங்களை ஜிஎஸ்டி கவுன்சில் ஊக்குவிப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனத்துக்கு (ஒரு தனிநபர் மற்றொரு தனிநபரிடம் விற்கும்போது) ஜிஎஸ்டி விதிக்கப்படாது. ஒரு நிறுவனம்/பதிவு செய்யப்பட்ட பயன்படுத்தப்பட்ட கார் (மின்சாரம்/பெட்ரோல்/டீசல்) விற்பனை செய்யப்படும்போது மார்ஜின் மதிப்பில் 18 சதவீதம் ஜிஎஸ்டியாக செலுத்தப்பட வேண்டும். முன்பு ஜிஎஸ்டி 12 சதவீதம் இருந்தது.

மார்ஜின் மதிப்பு என்பது சம்பந்தப்பட்ட வாகனம் வாங்கிய விலைக்கும் மற்றும் விற்பனை செய்யப்படும் விலைக்கும் இடையிலான மதிப்பு என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

பேக் செய்யப்படாத பாப்கார்னுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி, பேக் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி, கேரமல் பாப்கார்னுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்த விளக்கமும் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியானது.

பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். கேரமல் பாப்கார்னுக்கு 18 சதவீதம் விதிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும், உப்பு மற்றும் காரத்துடன் கூடிய பாப்கார்னுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் எந்த மாற்றமும் இல்லை. பாப்கார்னுக்கு தற்போது விதிக்கப்படும் வரி குறித்து சிபிஐசி சுற்றறிக்கையை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசிக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in