ஜிஎஸ்டியில் அதிரடி மாற்றங்கள்: குறையும் அன்றாடப் பொருள்களின் விலை! (முழு விவரம்) | Nirmala Sitharaman | GST

33 உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து பூஜ்ஜியமாக மாறுகிறது.
ஜிஎஸ்டியில் அதிரடி மாற்றங்கள்: குறையும் அன்றாடப் பொருள்களின் விலை! (முழு விவரம்) | Nirmala Sitharaman | GST
2 min read

ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம் பெரும்பாலான பொருள்கள் 18% முதல் 5% கீழ் வந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. மாநிலங்கள் சார்பில் நிதியமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

தீபாவளிப் பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர நாள் உரையில் அறிவித்திருந்தார். எனவே, இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நாடே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

"ஜிஎஸ்டி வரி இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. வெகுஜன மக்களை மனதில் கொண்டு இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாமான்ய மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது பற்றி கடுமையான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான பொருள்கள் முற்றிலுமாகக் குறைந்துள்ளன.

தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சோப்பு, சோப்பு பார், ஷாம்பூ, டூத் பிரஷ், மிதிவண்டி (சைக்கிள்), டேபில்வேர், கிச்சன்வேர் மற்றும் இதர வீட்டுப் பொருள்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாக வரி குறைக்கப்பட்டுள்ள பொருள்கள்

அதிஉயர் வெப்பநிலையில் இருக்கும் பால், செனா மற்றும் பன்னீர். அனைத்து இந்திய பிரெட் பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரி கிடையாது. எனவே, அது ரொட்டியாக இருந்தாலும் சரி, பராத்தாவாக இருந்தாலும் சரி அவை எதற்கும் ஜிஎஸ்டி கிடையாது.

12% அல்லது 18%-ல் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ள பொருள்கள்

உணவுப் பொருகள் - சாஸஸ், பாஸ்தா, இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், சாக்லேட், காபி, பதப்படுத்தப்பட்ட கறி, கார்ன்ஃபிளேக்ஸ், வெண்ணெய், நெய்.

28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ள பொருள்கள்

ஏசி, 32 இஞ்ச்-க்கு மேற்பட்ட டிவி, டிஷ்வாஷிங் மெஷின்கள், சிறிய ரக கார்கள், 350 அல்லது அதற்கும் குறைவான சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி தற்போது 18% ஆக உள்ளது. பேருந்துகள், லாரிகள் மற்றும் ஆம்புலன்ஸுக்கான ஜிஎஸ்டி 28%-ல் இருந்து 18% ஆகக் குறைகிறது. மூன்று சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டியும் 18% ஆகக் குறைகிறது.

33 உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து பூஜ்ஜியமாக மாறுகிறது.

வேளாண் சார்ந்த பொருள்களான டிராக்டர்கள் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி 12-ல் இருந்து 5 சதவீதமாகக் குறைகிறது. கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டியும் 12-ல் இருந்து 5 சதவீதமாகக் குறைகிறது.

சிமெண்டுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைகிறது. புற்றுநோய், அரிய வகை நோய் மற்றும் நீண்டகாலமாக இருந்து வரும் மற்ற தீவிர நோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 3 உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 5%-ல் இருந்து பூஜ்ஜியமாகக் குறைகிறது.

பல்வேறு மருந்துகளின் ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆகக் குறைகிறது. கண் பார்வைக்கான கண்ணாடி போன்றவற்றின் ஜிஎஸ்டியும் 28%-ல் இருந்து 5% ஆகக் குறைகிறது.

பெரும்பாலான பொருள்கள் 18 சதவீதம் முதல் 5 சதவீதத்துக்குள் வருகிறது.

சிறப்பு அடுக்காக 40% என ஓர் அடுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. பான் மசாலா, சிகரெட், குட்கா, பீடி போன்ற பொருள்களுக்கு 40% என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மிதமான அளவு மற்றும் பெரிய கார்கள், 350 சிசி திறனுக்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், விமானங்கள் - ஹெலிகாப்டர்கள் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான விமானங்கள், யாட்ச் (சொகுசுப் படகு) உள்ளிட்டவை 40%-க்கு கீழ் வரும்.

காப்பீட்டு சேவைகள் 18%-ல் இருந்து இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அனைத்து தனிப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அனைத்து தனிப்பட்ட சுகாதார காப்பீட்டுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது" என்றார் நிர்மலா சீதாராமன்.

மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 5%-ல் தொடர்வதாக வருவாய்த் துறைச் செயலர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

Nirmala Sitharaman | GST | Goods and Services Tax |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in