
கேரள மாநிலம் மலப்புரத்தில் உயிரிழந்த இளைஞருக்கு நிஃபா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பெங்களூருவிலிருந்து மலப்புரம் திரும்பிய 24 வயது இளைஞர் கடந்த செப்டம்பர் 9 அன்று தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, கிடைத்த மாதிரிகளைக் கொண்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த முடிவில் நிஃபா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
முடிவு வெளியானவுடன் சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. மேலும், இதுதொடர்பாக 16 குழுக்கள் அமைக்கப்பட்டன. உயிரிழந்த இளைஞருடன் தொடர்பிலிருந்தவர்கள் என 151 பேர் கண்டறியப்பட்டுள்ளார்கள்.
இதனிடையே, புனேவிலுள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டன. அந்த இளைஞர் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆய்வு முடிவில் உறுதி செய்யப்பட்டது.
அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "அந்த இளைஞர் நண்பர்களுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார். இவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5 பேருக்கு லேசான காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் உள்ளன" என்றார்.
கேரளத்தில் நடப்பாண்டில் முதன்முதலாக கடந்த ஜூலை மாதம் நிஃபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.