
நொய்டாவில் வரதட்சணை கொடுமையால் 26 வயது நிக்கி என்ற பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் ஒரு புதிய முன்னேற்றமாக, திருமணத்திற்குப் பிறகும்கூட நிக்கியின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் இருந்த தொடர்பும், அது சார்ந்து பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு குறித்த விவரமும் தற்போது வெளியாகியுள்ளது.
நிக்கி கொலை வழக்கு
கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தைச் சேர்ந்த நிக்கி கடந்த ஆகஸ்ட் 21 அன்று 70% தீக்காயங்களுடன் ஃபோர்டிஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். தீக்காயங்களுக்கான காரணம் சிலிண்டர் வெடிப்பு எனக் குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்த சம்பவம் நடந்த இடத்தை காவல்துறை அடைந்தபோது, சிலிண்டர் வெடித்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இருக்கவில்லை. அதற்கு பதிலாக, ஒரு மெல்லிய பாட்டிலும், லைட்டரும் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டன.
நிக்கியின் கணவர் விபின் மற்றும் மாமியார் தயா ஆகியோர் நிக்கி மீது தீ வைத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டதாக நிக்கியின் சகோதரி கஞ்சன் வாக்குமூலம் அளித்தார். விபினின் சகோதரர் ரோஹித்தை கஞ்சன் திருமணம் செய்துள்ளதால் அவரும் அதே வீட்டில்தான் வசித்து வந்தார்.
மேலும், நிக்கி மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களை தனது கைபேசி மூலமாக கஞ்சன் பதிவு செய்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவின. இதன் தொடர்ச்சியாக விபின், அவரது சகோதரர் ரோஹித், தாயார் தயா மற்றும் தந்தை சத்யவீர் ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
வரதட்சணை விவகாரம்
கடந்த 2016-ல் நிக்கிக்கும், விபினுக்கும் திருமணம் நடைபெற்றபோது ரூ. 36 லட்சம் ரொக்கம், ஸ்கார்பியோ கார், மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க நகைகள் போன்றவற்றஒ வரதட்சணையாக வழங்கியதாக நிக்கியின் தந்தை பிகாஹ்ரி சிங் கூறினார்.
மேலும், தன்னிடம் இருந்து பணம் பெற்றுச் செல்லத் தவறியபோதெல்லாம் உடல் ரீதியாக தனது மகள் நிக்கி துன்புறுத்தப்பட்டதாக பிகாஹ்ரி சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக, புகுந்த வீட்டில் கொடுப்பதற்காக ரூ. 20,000, ரூ. 30,000, ரூ.50,000 என தன் மகளுக்கு அடிக்கடி பணம் கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
திருமணம் மீறிய உறவு
அக்டோபர் 2024-ல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜார்ச்சா காவல் நிலையத்தில், விபின் தன்னை தாக்கியதாக ஒரு பெண் புகாரளித்தார். விபின் நிக்கியை திருமணம் செய்த பிறகும், புகாரளித்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
நிக்கியும் அவரது சகோதரி கஞ்சனும், விபினையும் அந்தப் பெண்ணையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் முயற்சியில், விபின் அந்தப் பெண்ணை அடித்ததாகக் கூறப்படுகிறது, அதன் தொடர்ச்சியாக விபினுக்கு எதிராக அந்த பெண் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.