தில்லி பிரசாந்த் விஹார் சாலையில் உள்ள சி.ஆர்.பி.எஃப். பப்ளிப் பள்ளிக்கு அருகே மர்மப் பொருள் வெடித்தது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் தில்லியின் ரோஹினி பகுதியில் உள்ள பிரசாந்த் விஹார் சாலையில் சி.ஆர்.பி.எஃப். பப்ளிப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இன்று காலை 7.47 மணிக்கு இப்பள்ளியின் சுற்றுச்சுவருக்கு அருகே வெடிச் சத்தம் கேட்டுள்ளது. அதன் பிறகு வெடிச் சத்தம் கேட்ட இடத்தில் கரும்புகை எழுந்துள்ளது.
இதைப் பார்த்த அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், தில்லி காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். ஆனால் இந்த வெடி விபத்தால் தீப்பிடிப்பு சம்பவமோ அல்லது பள்ளியின் சுற்றுச்சுவருக்கு பாதிப்போ ஏற்படவில்லை.
அதேநேரம் வெடிச்சத்தம் கேட்ட இடத்துக்கு அருகில் இருந்த ஒரு கடையின் கண்ணாடியும், அறிவிப்பு பலகையும், அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரும் சேதம் அடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தில்லி காவல்துறையின் வெடிகுண்டு நிபுணர்கள் குழு, தடயவியல் நிபுணர்கள், என்.எஸ்.ஜி. அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.
மேலும் இதனைத் தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்ட இடத்தில், மோப்ப நாய்களையும், அதிநவீன கருவிகளையும் உபயோகித்து 30-க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை அடுத்து, சம்பவ இடத்தில் வெடித்தது நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் பள்ளியின் சுற்றுச்சுவருக்கு அருகே இருக்கும் சி.சி.டி.வி.களின் காட்சிகளை தில்லி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தில்லியில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.