தில்லி கார் குண்டு வெடிப்பு: மேலும் 4 பேரைக் கைது செய்தது என்.ஐ.ஏ. | Delhi Car Bomb Blast |

ஏற்கெனவே கார் குண்டு வெடிப்பு தொடர்புள்ள வழக்குகளில் காவல்துறை கைது செய்தவர்களை விசாரணைக்கு எடுத்த என்.ஐ.ஏ.
தில்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது
தில்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது
1 min read

தில்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

தில்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10 அன்று கார் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 20 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கார் வெடிப்பு சம்பவத்தைப் பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிபடுத்தியுள்ள தேசிய புலனாய்வு முகமை, கார் வெடிப்பில் வெடிகுண்டு வைத்து விபத்துக்குள்ளான காரை வாங்கிக் கொடுத்து அதனை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏற்கெனவே அமீர் ரஷீத் அலி, ஜசிர் வானி உள்ளிட்ட இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தில்லி கார் குண்டு வெடிப்பு தொடர்புள்ள வழக்குகளில் காவல்துறையினரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட அடீல் அஹமது, முசாமில் ஷகீல், ஷாஹீன் சயீத் மற்றும் இர்பான் அஹமது ஆகிய நால்வரைத் தேசிய பாதுகாப்பு முகமையினர் கைது செய்துள்ளார்கள். இதில் அடீல் அஹமது என்பவர் காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதற்காக உத்தர பிரதேசத்தில் கைதானவர். முசாமில் ஷகீல் என்பவர் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கைதானவர். இவர் வீட்டிலிருந்து 2,900 கிலோ வெடிபொருள்களைக் காவல்துறை பறிமுதல் செய்தது. ஷாஹீன் சயீத் என்பவர் லக்னோவில் கைதானவர். இவர் இந்தியாவில் ஜெய்ஷ் இ முகமது மகளிர் பிரிவை உருவாக்கும் திட்டத்துடன் செயல்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது. மேலும், இர்பான் அஹமது வாகே என்பவர் காஷ்மீரைச் சேர்ந்த மதபோதகர். இவரையும் காஷ்மீர் சோபியான் பகுதியில் வைத்து காஷ்மீர் காவல்துறை கைது செய்தது.

இதையடுத்து நால்வரையும் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தேசிய பாதுகாப்பு முகமையினர் விசாரணைக்கு எடுத்துள்ளனர். அவர்களை 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் தில்லி குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய பாதுகாப்பு முகமையினர் கைது செய்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

Summary

The National Investigation Agency (NIA) has arrested four more prime accused involved in the November 10 blast near the Red Fort in Delhi, taking the total number of arrests in the case to six.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in