பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவர் கைது

"இருவரும் விசாரணையின்போது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளின் அடையாளங்களைத் தெரிவித்துள்ளார்கள்."
பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவர் கைது
1 min read

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்ததாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இருவரைக் கைது செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 26 பேர் கொல்லப்பட்டார்கள். 16 பேர் காயமடைந்தார்கள். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மே 7 அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதற்கு பாகிஸ்தானும் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்தது. பிறகு, இரு நாடுகளும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டதன்படி இந்தச் சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

இதனிடையே, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து என்ஐஏ விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவரைக் கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை.

"பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு 3 பயங்கரவாதிகளுக்கு பர்வைஸ் மற்றும் பஷீர் அடைக்கலம் கொடுத்துள்ளார்கள். இவர்கள் இருவர் தான் பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் இதர உதவிகளை வழங்கியுள்ளார்கள்" என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.

என்ஐஏ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இருவரும் விசாரணையின்போது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளின் அடையாளங்களைத் தெரிவித்துள்ளார்கள். மேலும், பயங்கரவாதிகள் லஷ்கர்-ஏ-தய்பா அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் நாட்டினர் என்பதையும் இருவரும் உறுதிபடுத்தியுள்ளார்கள்" என்றார்.

இருவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in