

தில்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய அமீர் ரஷீத் அலி என்பவரைத் தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10 அன்று மாலை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், 24-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலைத் தாக்குதல் என்றும், அதை நடத்தியது ஹரியானாவின் அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய மருத்துவர் உமர் உன் நபி என்பதும் கண்டறியப்பட்டது. அதனடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், உமர் உன் நபியின் கூட்டாளி என்றூ சந்தேகிக்கப்படும் அமீர் ரஷீத் அலி என்பவரைத் தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்துள்ளார்கள். இதுகுறித்து என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“தில்லி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அமீர் ரஷீதின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உமர் நபியுடன் அமீர் சேர்ந்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. கார் வாங்குவதற்காக அமீர் தில்லிக்கு வந்துள்ளார். அந்த காரையே வெடிகுண்டு பொருத்தப்பட்ட வாகனமாக மாற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு வெடித்த காரை ஓட்டிய உமர் நபி, ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியைச் சேர்ந்தவர்; ஹரியானாவின் அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர். உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. தில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தில்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேச காவல்துறை மற்றும் பிற மத்திய அமைப்புகளுடன் இணைந்து, இந்த தாக்குதலின் பின்னால் உள்ள பெரிய சதித்திட்டத்தை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The National Investigation Agency has arrested Amir Rashid Ali, who is involved in the car bomb blast case near Delhi's Red Fort, and is investigating.