
ஜி.எஸ்.டி. வரி விகித சீரமைப்புக்கான மாநில அமைச்சர்கள் குழு அளித்த அறிக்கையின்படி குளிர்பானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017-ல் நடைமுறைக்கு வந்த ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி.யில் தற்போது 5, 12, 18 மற்றும் 28 என நான்கு வரி விகிதங்கள் உள்ளன. இந்த நான்கு வரி விகிதங்களை சீரமைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு பரிந்துரைகளை வழங்க மாநில நிதி அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பல கட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றம் தொடர்பான அறிக்கையை இறுதி செய்துள்ளது மாநில அமைச்சரவைக் குழு. இதன்படி சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீதும், குளிர்பானங்கள் மீதும் பிரத்யேகமாக 35 சதவீத ஜி.எஸ்.டி. வரியை விதிக்க அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளது.
அமைச்சரவைக் குழுவின் இந்த அறிக்கை ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த அறிக்கை மீது வரும் டிசம்பர் 21-ல் விவாதம் நடத்தி அதற்கான இறுதி முடிவை ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுக்கும் என செய்தி வெளியாகியுள்ளது. அதேநேரம், வரி விகித சீரமைப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
அமைச்சரவைக் குழுவின் அறிக்கை ஏற்கப்பட்டால் புகையிலை பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலை உயரும். ஏற்கனவே அமலில் இருக்கும் 28 சதவீத வரியால் இந்தியாவில் குளிர்பான சந்தைக்கான வளர்ச்சி மந்தமான நிலையில் உள்ளது எனவும், இது மேலும் 35 சதவீதமாக உயர்த்தப்பட்டால் குளிர்பான சந்தை பெரிதும் பாதிக்கப்படும் எனவும் பிரபல குளிர்பான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.