
பீஹார் மாநிலத்திற்கு நடப்பாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மத்திய பட்ஜெட்டில் அம்மாநிலத்திற்காகப் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
2025-2026-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) காலை மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் பீஹார் மாநிலத்திற்காக அறிவிக்கப்பட்ட பிரத்யேகத் திட்டங்கள்:
1) பீஹாரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்கப்படும்,
2) பட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்,
3) ஐஐடி பட்னா உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்,
4) புதிய தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் பீஹாரில் அமைக்கப்படும்,
5) தாமரை விதை (மக்கானா) உற்பத்தியை பெருக்க புதிய வாரியம் அமைக்கப்படும்,
6) வடக்கு பீஹாரின் கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கப்படும்.
நடப்பாண்டின் இறுதியில் பீஹார் மாநில சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. பீஹாரில் தற்போது பாஜக-ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும், தனிப்பெரும்பான்மை இல்லாத மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 12 எம்.பி.க்கள் உள்ளார்கள்.
எனவே கூட்டணிக் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலத்திற்கு, தேர்தலைக் கருத்தில்கொண்டு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. பீஹாருக்கான புதிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிவித்தபோது, அதைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டார்கள்.