
பிரயாக்ராஜ் மஹா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில், கும்பமேளா நிகழ்வுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும், நெறிமுறைகளையும் விதித்து உத்தரவிட்டுள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மஹா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு கங்கையில் புனித நீராடும் வகையில் நேற்றைய (ஜன.29) தினம் அதிகாலையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமம் பகுதியில் திரண்டனர்.
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உ.பி. காவல்துறை அறிவித்தது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பிரயாக்ராஜ், கௌஷாம்பி, வாரணாசி, அயோத்தி, கோரக்பூர் உள்ளிய்ய மாவட்டங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கும்பமேளா நிகழ்வுக்கான பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும், நெறிமுறைகளையும் விதித்து உத்தரவிட்டுள்ளார் யோகி ஆதித்யநாத். அவை,
1) விஐபி அனுமதி சீட்டு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.
2) மஹா கும்பமேளா பகுதிக்குக்குள் நுழைய அனைத்து வித வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
3) பிப்ரவரி 4 வரை பிரயாக்ராஜ் மாவட்டத்துக்குள் 4 சக்கர வாகனங்கள் நுழைய முழு தடை விதிக்கப்படுகிறது.
4) சாலையோரங்களில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளை வேறு காலி இடங்களுக்கு இடம் மாற்றவேண்டும்.
5) கும்பமேளா பகுதியில் மக்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும்.
6) தடுப்புகளை வலுவாக அமைத்து மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். வாகன நிறுத்துமிடங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
7) புனித நீராடலை முடித்துவிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பொருட்டு ரயில் நிலையங்களில் திரளும் மக்கள் கூட்டத்தையும் முறைபடுத்த வேண்டும்.
8) பிப்ரவரி 3-ல் வசந்த பஞ்சமி நாளில் நடைபெறும், அம்ரித் ஸ்னான் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை காவல்துறை தலைவரும், தலைமைச் செயலரும் ஆய்வு செய்யவேண்டும்.