
பிரிவினை கொடூரங்கள் நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் அது தொடர்பான புதிய விளக்கக் கையேட்டை பள்ளி மாணவர்களுக்காக என்சிஇஆர்டி வெளியிட்டுள்ளது.
பிரிவினை என்பது ஒரு தனிநபரின் பணி அல்ல, மாறாக மூன்று சக்திகளின் பணி என்று அதில் கூறப்பட்டுள்ளது - `பிரிவினையைப் பிரச்சாரம் செய்த ஜின்னா; பிரிவினையை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் மற்றும் பிரிவினையைச் செயல்படுத்த அனுப்பப்பட்ட மவுண்ட்பேட்டன்.’ என்று கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசப் பிரிவினையாக் நாட்டிற்கு காஷ்மீர் ஒரு புதிய பாதுகாப்புப் பிரச்னையாக மாற்றியது என்று அது குறிப்பிடுகிறது, மேலும்: `அப்போது இருந்து நமது அண்டை நாடுகளில் ஒன்று இந்தியா மீது பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுக்க இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி வருகிறது.’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரப் பரிமாற்றத்தை முன்தேதியிட்டு அமல்படுத்தியதற்காக அன்றைய பிரிட்டிஷ் வைசிராய் மவுண்ட்பேட்டனை இந்த கையேடு கடுமையாக விமர்சிக்கிறது. `மவுண்ட்பேட்டன் ஜூன் 1948-ஐ அதிகாரப் பரிமாற்றத்திற்கான தேதியாக அறிவித்தார், ஆனால் பின்னர் அதை ஆகஸ்ட் 1947-க்கு முன்தேதியிட்டு மாற்றினார்.’
இரு நாட்டு எல்லைகளை அவசரமாக வரையறுத்ததால் குழப்பம் ஏற்பட்டது என்று கையேட்டில் சுட்டிக்காட்டப்படுகிறது
பிரிவினைக்கான என்சிஇஆர்டியின் விளக்கத்தை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, `இந்த ஆவணம் உண்மையைச் சொல்லாததால் அதை எரித்துவிடுங்கள். ஹிந்து மகாசபைக்கும் முஸ்லிம் லீக்கிற்கும் இடையிலான தொடர்பு காரணமாக பிரிவினை ஏற்பட்டது’ என்று கூறினார்.
`இந்த நாட்டிற்கு ஆர்.எஸ்.எஸ். ஒரு ஆபத்து. பிரிவினை என்ற கருத்தை முதன்முதலில் 1938-ல் ஹிந்து மகாசபை பரப்பியது. 1940-ல் ஜின்னா அதை வழிமொழிந்தார்,’ என்று பவன் கெரா ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இந்திய பிரிவினைக்கு யார் காரணம், வகுப்பறைகளில் இந்திய வரலாறு எவ்வாறு கற்பிக்கப்படவேண்டும் என்பது குறித்த விவரிப்புகளுடன் என்சிஇஆர்டியின் இந்த பிரிவினை குறித்த வெளியீடு ஒரு புதிய அரசியல் மோதல் புள்ளியாக மாறியுள்ளது.