
புதிய வருமான வரி மசோதாவை மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த பிப்.1-ல் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தற்போது நடைமுறையில் உள்ள 1961 வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என பட்ஜெட் உரையில் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 1961-ம் வருடம் அமலான வருமான வரிச் சட்டம் பலமுறை திருத்தப்பட்டு பல பிரிவுகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. பல பக்கங்களைக் கொண்டுள்ள இதன் மொழியைப் புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருப்பதால், வரி செலுத்துவோருக்குப் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, புதிய வருமான வரி மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்தது. பட்ஜெட் அறிவிப்பின்படி கடந்த வாரம் புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், புதிய வருமான வரி மசோதாவை மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
622 பக்கங்களைக் கொண்ட புதிய வருமான வரி மசோதாவில் 23 அத்தியாயங்களும், 16 அட்டவணைகளும், 536 உட்பிரிவுகளும் உள்ளன. `வரி செலுத்துவோர் சாசனம்’ இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, மதிப்பீட்டு ஆண்டு என்பது வரி ஆண்டு என்றும், முந்தைய ஆண்டு என்பது நிதி ஆண்டு என்றும் மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு, 2024-25 நிதியாண்டில் பெறப்படும் வருமானம், 2025-26 நிதியாண்டில் மதிப்பிடப்படுகிறது. 2024-25 நிதியாண்டு `நிதி ஆண்டு’ என்றும், 2025-26 நிதியாண்டு `வரி ஆண்டு’ என்றும் அழைக்கப்படும்.