
வந்தே பாரத் ரயில்களில் இருக்கை பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, தெற்கு ரயில்வே நிர்வாகம் தற்போது புதிய முன்பதிவு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ரயில் நிலையங்களில் இருந்து வந்தே பாரத் ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்படும் எட்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில், நேற்று (ஜூலை 18) முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, வந்தே பாரத் ரயில்கள் புறப்பட்டவுடன் ஆன்லைன் முன்பதிவுகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் புதிய ஏற்பாட்டின் கீழ், இந்த எட்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள காலி பயணச்சீட்டுகளை, முதல் ரயில் நிலையத்திலிருந்து இருந்து ரயில்கள் புறப்பட்ட பிறகும் முன்பதிவு செய்யலாம்.
உதாரணமாக, சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் திருச்சியிலிருந்து நாகர்கோவிலுக்குப் பயணிக்கும் பயணிகள், இரண்டாவது அட்டவணை தயாரிப்புக்கு முன்பு வரை மட்டுமே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடிந்தது. அதாவது சென்னை எழும்பூரிலிருந்து அதிகாலை 5 மணிக்கு ரயில் புறப்படுவதால், அதிகாலை 4.45 மணி வரை மட்டுமே முன்பதிவுகள் அனுமதிக்கப்பட்டன.
திருத்தப்பட்ட புதிய நடைமுறையின் கீழ், சென்னை எழும்பூரிலிருந்து ரயில் புறப்பட்ட பிறகும், அந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கான மீதமுள்ள காலி இருக்கைகள் இணைய வழி முன்பதிவில் கிடைக்கும். அந்த ரயில் காலை 9 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் முன்பு, அங்கிருந்து ஏறும் பயணிகள் இருக்கை இருக்கும் தன்மையைப் பொறுத்து காலை 8.45 மணி வரை பயணச்சீட்டுகளை இனி முன்பதிவு செய்யலாம்.